திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியான அதிமுக கைப்பற்றியதில் மூன்றாவது முறையாக தேன்மொழி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அப்படி இருந்தும் கூட ஆளுங்கட்சியான அந்தப்பகுதி திமுகவினர் இத்தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வம் கட்டாமல் தங்களுக்குள் கோஷ்டி பூசலை உருவாக்கிக் கொண்டு கட்சியை வளர்க்கவும் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே அறிவாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இந்த நிலக்கோட்டை தொகுதியில் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை என இரண்டு யூனியன்கள் உள்ள. இந்த யூனியன்களுக்குட்பட்ட பகுதிகளை 5 ஒன்றியங்களாக பிரித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வத்தலக்குண்டு ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு வத்தலக்குண்டு வடக்கு, வத்தலக்குண்டு தெற்கு என புதிய ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 3 பேரூராட்சிகள், 8 ஊராட்சிகள் அடங்கிய வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக கே.பி. முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 9 ஊராட்சிகள் அடங்கிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெற்கு ஒன்றியத்திற்கு கனிக்குமார் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் நிலக்கோட்டை யூனியனை மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் நிலக்கோட்டை பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை அடங்கிய பகுதிக்கு மணிகண்டன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் 7 ஊராட்சி ஒன்றியங்களாக சுருக்கப்பட்டு ஒன்றிய பொறுப்பாளராக சௌந்தரபாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய செயலாளர் பதவி கேட்டு நீண்ட நாள் போராடி வந்த கரிகால பாண்டியனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கு ஒன்றியம் என ஒரு கட்டமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது.
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மற்றும் 7 ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளுக்கு கரிகால பாண்டியன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை தொகுதியில் திமுக அதிக அளவில் வாக்குகளை பெற்றுத் தர வேண்டும். பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் திமுக கொடி பறக்க வேண்டும் என்பது கட்சித் தலைமையின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காகவே கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றியங்களை பிரித்து புது வியூகத்தை உருவாக்கி தேர்தல் களத்தை சந்திக்க ஆளும் கட்சியான திமுக தயாராகி வருகிறது.