115 சிறப்பு சோதனைச் சாவடிகள், 75 மோப்பநாய்கள், கேமிரா பொருத்தப்பட்ட கண்கானிப்பு வாகனங்கள் மற்றும் ஆளில்லாவிமானம் மூலம் மாவட்டம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 61 ஆவது நினைவு தினம் துவங்கியுள்ளது.
பரமக்குடியில் செப்டம்பர் 11 அன்று தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் கொண்டாடப்படுகின்றது. தேவேந்திர குலப் பண்பாட்டு கழகத்தார் தன்னார்வத் தொண்டர்களாகக் களப்பணியாற்றி சிறப்பிக்கும் இவ்விழாவில் பல்வேறுக்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திய நினைவு நாளில், தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 5 டி.ஐ.ஜி, 17 எஸ்.பி, 19 ஏ.டி.எஸ்.பி , 48 டி.எஸ்.பி, 69 ஆய்வாளர்கள் உள்பட 4 ஆயிரத்து 300 போலீசார் பாதுகாப்புப் பணியினை மேற்கொள்ள பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக, இன்று காலை இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூரில் இருந்து ஊர் பொதுமக்கள் அமைதி பேரணியாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி நினைவு தினத்தை துவக்கி வைத்தனர். அதற்கடுத்து ஒவ்வொருவரும் அஞ்சலி செலுத்திய நிலையில் முன்னாள் அமைச்சரும், `தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப.தங்கவேலன் தி.மு.க.சார்பில் அஞ்சலி செலுத்திவிட்டு, " இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாககவும், விடுமுறைநாளாகவும் அரசு அறிவிக்க வேண்டும்." என கோரிக்கையை வைத்தார். அதன் பின் ம.தி.மு.க.சார்பில் சதன் திருமலைக்குமார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்வேறு தலைவர் வருகை தரவிருப்பதால் இங்கு பரப்பரப்புக்களுக்கு பஞ்சமில்லை.