![Elephants take refuge in Jawalagiri forest](http://image.nakkheeran.in/cdn/farfuture/dsrxJyJ45LiGby8r-M1scbBwzu-2za7wDFO_XhHgU4s/1634145297/sites/default/files/inline-images/ele33322.jpg)
கர்நாடகாவில் இருந்து கூட்டமாக இடம் பெயர்ந்த சுமார் 70 யானைகள் தமிழ்நாடு எல்லைப்பகுதியான ஜவளகிரி வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளன.
கர்நாடகாவில் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் யானைகள் தமிழ்நாடு வனப்பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து 70- க்கும் மேற்பட்ட யானைகள் தமிழ்நாடு வனப்பகுதியை நோக்கி இடம் பெயரத் தொடங்கின. இதில் 70 யானைகள் தற்போது தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஜவளகிரி காப்புக்காடு வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளன. அங்கிருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் யானைகள் நுழையாதவாறு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ராகி பயிர்களைச் சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தும் என்பதால், அதனை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.