ஓசூரில் வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களுக்கு வனத்துறை சார்பில் பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வனத்தை ஓட்டியுள்ள கிராமப் பகுதிகளில் முகாமிட்டுவரும் நிலையில் எச்சரிக்கையானது கொடுக்கப்பட்டுள்ளது. ஓசூரை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை வனத்துறையால் விரட்டப்பட்டு வருகிறது. இருப்பினும் மீண்டும் மீண்டும் யானை கூட்டம் ஓசூரை ஒட்டியுள்ள தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சமடைந்து விளை நிலங்களின் சேதப்படுத்தி வருகிறது.
விளை நிலங்களை நோக்கி படையெடுக்கும் யானைக் கூட்டங்களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்பொழுது நெல், ராகி ஆகிய பயிர்களின் அறுவடை முடிந்திருந்தாலும் மற்ற பயிர்கள் யானைக் கூட்டத்தால் சேதப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதேபோல் யானைகள் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு ஆகிய சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வனத்துறை சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.