தமிழகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளின் நிலையைக் கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 37 வளர்ப்பு யானைகள் உள்ளதாக தமிழக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா? என ஆய்வு செய்ய கடந்த 2016- ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு, வளர்ப்பு யானைகளின் உரிமையை முறையாகப் பராமரிக்கவில்லை என்றும் வளர்ப்பு யானைகளின் நிலையைக் கண்டறிய ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்திட, தலைமை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமண்ட் ரூபின் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வு, யானைகள் தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை அந்த அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.