Electricity hike should be rolled back immediately EPS Emphasis

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளியான இந்த அறிவிப்பின்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு என் கடும் கண்டனம்.

பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் திமுக முதல்வர். மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த அரசுக்கு? ‘சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்’ என்று மேடைதோறும் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!.

உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்!. மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.