Elderly man dies after being stung by bees

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (64). விவசாயத் தொழிலாளி. இவர் நேற்று காலை சக தொழிலாளர்களுடன் கொக்கரகுண்டு பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றுக்கு வேலைக்குச் சென்றிருந்தார். அப்போது திடீரென சூழ்ந்து வந்த தேனீக்கள் தொழிலாளிகளை கொட்டியுள்ளது. அதில் சாமிநாதனை அதிகளவிலான தேனீக்கள் கொட்டியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, சம்பவ இடத்திலேயே சாமிநாதன் மயக்கம் அடைந்து விட்டார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் அனைவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டனர். அங்கு மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. சாமிநாதனை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.