தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவெற்றியூரில் வெள்ள நிவாரண பணிகளை மக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஊழலில்தான் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகிய மூன்றில்தால் தமிழ்நாடு முதன்மை மாநிலம். திமுக அரசு அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் கோடி திட்டங்களில் பெரும் ஊழல் நடந்திருப்பது.
2015 ஆம் ஆண்டு கன மழை காரணமாகத் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விரைந்து மக்களுக்கு மின்சாரம் கொடுத்தோம். ஆனால் தற்போது அப்படியில்லை. இந்த மாதிரி மழைக் காலங்களில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காகத்தான் தரையில் மின்சாரம் உயரை பதித்து மின் இணைப்பு அளித்தோம். தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு நாங்கள்தான் காரணம். மழை வெள்ளம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை வரும்போது சென்னை மாநகர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது என்று எல்லாருக்கும் தெரியும்; அதனால் பால் தட்டுப்பாடு வரும் என்று அரசுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது மழைக்கு முன்பே நியாய விலை கடைகளின் மூலம் பால் பவுடரை மக்களுக்கு விநியோகம் செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? புயல் வரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் மெத்தனமாக இருந்திருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் உணவு, பால், குடிநீர் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை” என்று தமிழக அரசு மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.