மூதறிஞர் ராஜாஜியை விட அதிக நினைவாற்றல் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என புகழ்ந்து தள்ளியுள்ளார் அதிமுகவின் மூத்த நிர்வாகி பொன்னையன்.
அதிமுகவின் மூத்த நிர்வாகியான பொன்னையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்த வரைக்கும் 4 ஆண்டு காலம் அற்புதமான ஆட்சி நடத்தி இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சர் என்ற பெயரை தமிழகத்திற்கு தேடித் தந்திருக்கிறார். எடப்பாடிக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. ஒரு செய்தி என்றால் இரவில் கூட நடுநேரம் படிப்பார். டிவி மூலமாக உலக செய்திகளை பார்ப்பார்; இந்திய செய்திகளை பார்ப்பார்; தமிழகத்தின் செய்திகளை பார்ப்பார். ஒரு மணி நேரம் பேசினாலும் துண்டு சீட்டு பார்க்காமல் உள்ளத்தில் இருந்து, நெற்றிக்கண்ணிலிருந்து புள்ளிவிவரங்களை சொல்வார்.
13 லட்சத்து 2 ஆயிரத்து 41 ரூபாய் என்ற ஒரு புள்ளிவிவரம் இருந்தால் அதைக்கூட அப்படியே சொல்லக்கூடிய அளவிற்கு நினைவாற்றல் கொண்டவர். மூதறிஞர் ராஜாஜியை விட நினைவாற்றல் அதிகம் மிக்கவராக அவர் செயல்பட்டு கொண்டிருப்பதுதான் அவருக்கு இருக்கும் அளப்பரிய வெற்றி. நாங்கள் குறைந்த வாக்குகளை பெறவில்லை, நல்ல வாக்குகளை பெற்று இருக்கிறோம். இதுதான் உண்மை நிலை.
பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உண்மை என்று நம்பப்படும் என்ற தத்துவத்திற்கு சொந்தக்காரர்களாக திமுக காரர்கள் இருக்கிறார்கள். எங்களுடைய வளர்ச்சி முறியடிக்கப்படுகிறது. வரும் தேர்தலில் மிகச் சிறப்பான கூட்டணியை எடப்பாடி அமைப்பார். அதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கூட்டணியே ஒருவேளை இல்லை என்றாலும் தனித்து நின்று அற்புதமான ஆட்சித் திறமை, நிர்வாக திறமை, ஞாபக சக்தி, சொல் வன்மை காரணமாக 2026ல் தனித்து நின்றாலும் தன்னாட்சி அமைப்பார் ''என்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சி.வி.சண்முகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து பொன்னையன் விமர்சித்து பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.