Skip to main content

எடப்பாடி வழக்கு ! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Edappadi case! Delhi High Court order

 

பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக பத்து நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை அங்கீகரிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே கர்நாடகாவில் முன்பு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அதிமுக தரப்பில்  வலியுறுத்தப்பட்டது.

 

அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. எனவே இந்த கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரினார். 

 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இ.பி.எஸ் தரப்பு, ஏற்கனவே பல முறை இதுபோன்ற பதிலையே தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. கடந்த ஜூலை 2022 முதல் இதனையே கூறுகின்றனர். ஆனால் முடிவெடுக்கவில்லை.  மேலும் கர்நாடகத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். எனவே 10 நாட்கள் அவகாசம் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையல், குறுக்கிட்ட ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், "சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான மூல வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை தற்போதைக்கு விசாரிக்கக் கூடாது. தங்கள் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும்” தெரிவித்தார்.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் உத்தரவு பிறப்பித்த  நீதிபதி  புருசந்திரா குமார் கவுரவ், ஏற்கனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 10 நாள் அவகாசம் வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்த நிலையில், அந்த அவகாசத்தை வழங்குவதாகவும், 10 நாட்களில் அ.தி.மு.க. சட்ட விதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக் கோரி இ.பிஎஸ் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் எனவும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். மேலும், அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை அங்கீகரிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்