Skip to main content

கடந்த 8 ஆண்டுகளில் 5260 கிலோ தங்கம்! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!!

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

தமிழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழை பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 5260 கிலோ தங்கம் வழங்கப்பட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதமாக கூறினார். 

 

edapadi pazhanisamy speech at salem

 

 

சேலத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை இரவு சேலம் வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (செப். 29) தாலிக்கு தங்கம் வழங்கும் விழா, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அலைபேசி வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகளின் துவக்க விழாக்கள் நடந்தன. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது: 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011ம் ஆண்டு, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அதன்படி ஏழைப் பெண்களின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் கைம்பெண்கள், ஏழை கைம்பெண்களின் மகள், கலப்புத்திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் ஆகியோர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.  

இத்திட்டத்தின் கீழ் பட்டதாரி அல்லாதோருக்கு 25 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் திருமாங்கல்யம் செய்வதற்கு முதலில் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு முதல் அதை 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கினார் ஜெயலலிதா. 

கடந்த 2011 முதல் நடப்பு ஆண்டு வரையிலான எட்டு ஆண்டுகளில் 4,71,237 பட்டதாரி பெண்களும், 6,74,673 பட்டதாரி அல்லாத பெண்களும் என மொத்தம் 1145910 பேர் பயன் அடைந்துள்ளனர். இதற்காக 5260.72 கிலோ தங்கம் வழங்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் செயல்படுத்தப்படவில்லை. 

தாய்மார்கள் பெற்றெடுக்கின்ற குழந்தைகளை ஜெயலலிதா தன் குழந்தைகளைப்போல் கருதி, தாயுள்ளத்தோடு அக்குழந்தைகளுக்கு 16 வகையான பொருள்கள் அடங்கிய அம்மா பரிசு பெட்டகம், கரு நல்ல முறையில் வளர்வதற்கு ஊட்டச்சத்து பெட்டகம் என அனைத்து உதவிகளையும் வழங்கியிருக்கிறார். 

ஜெயலலிதா, பெண்களுக்கென நிறைய சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவில் கடனுதவி வழங்கிய மாநிலம் தமிழ்நாடு. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னுக்கு வருவதற்கு அடித்தளமாக விளங்கியவர் ஜெயலலிதாதான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். 

தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்கள் 49 சதவீதமாக உயர்ந்துள்ளதற்கு பெண்கள் அதிக அளவில் கல்வி பயில்வதுதான் காரணம். கடந்த எட்டு ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 237.50 கிலோ தங்கம் ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

நடப்பு ஆண்டில் சேலம் மாவட்டத்தில் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 6000 ஏழைப் பெண்களுக்கு 23.39 கோடி நிதியுதவியும், 18.73 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு உள்ளது.  

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்