சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசுப் பள்ளி மாணவி திடீரென மயக்கமடைந்த நிலையில், பள்ளிக்கு வெளியில் இருந்த கடையில் இருந்த தரமற்ற தின்பண்டங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் பள்ளிக்கு வெளியில் உள்ள கடை ஒன்றில் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஜூஸ் ஒன்றை வாங்கி குடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற அந்த மாணவி மயக்கமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அந்த சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மாணவியிடம் விசாரிக்கையில் காலை வகுப்பறைக்கு வருவதற்கு முன் பள்ளிக்கு வெளியில் உள்ள கட்டில் கடையில் ஜூஸ் வாங்கி குடித்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் சென்றது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடை வைந்திருத்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செய்த ஆய்வில் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த பல தின்பண்டங்கள் கெட்டுபோய் கலவாதியாக இருந்தது தெரியவந்தது. ''கலர் கலராக இருக்க இது எல்லாம் கெமிக்கல் புரிகிறதா? எப்படி இந்த கலர் வருகிறது சிவப்பு, மஞ்சள், பச்சைனு எப்படி வருது. கெமிக்கல் பொடி போட்டால்தான் வரும் புரியுதா?'' என கட்டில் கடைக்கார பெண்மணியிடம் கேள்வி எழுப்பியவாறே, காலாவதியான பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பறிமுதல் செய்தார். மேலும் குளோப் ஜாமூன் இருந்த பிளாஸ்டிக் கப்பில் ஸ்பூனால் குளோப் ஜாமூனை எடுத்து தராமல் கைகளால் எடுத்து தந்ததை கண்டித்த அதிகாரி, தூய்மையாக திண்பண்டங்களை கையாள வேண்டும் என்று எச்சரித்து சென்றார்.