சென்னை வண்டலூர் பகுதியில் நடத்தப்பட்ட ஆட்டோ ரேஸில் விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கெனவே சென்னையின் பல பகுதிகளில் ஆட்டோ ரேஸ்கள் இரவு நேரங்களில் நடைபெற்று அதனால் விபத்துக்கள் ஏற்பட்டது தொடர்பான சம்பவங்கள் அரங்கேறி இருந்தது. இந்நிலையில் சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர்ச் செல்லும் வெளிவட்ட சாலையில் கடந்த 15 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் சர்.. சர்.. என ஆட்டோக்கள் பறந்தது. இந்தச் சம்பவம் மற்ற வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. அதிகாலை நேரத்தில் வாரத்திற்கு ஒரு முறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஆட்டோ ரேஸ்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த 15 ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற ரேஸில் மொத்தமாக எட்டு ஆட்டோக்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. ரேஸில் இறங்கியுள்ள ஆட்டோக்களை கண்காணிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் 30க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்துள்ளனர்.
இப்படி ஆட்டோக்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் செங்குன்றம் அருகே சென்ற பொழுது ஆட்டோக்கள் மீது இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் வாகனங்கள் உரசி விபத்து ஏற்பட்டது. இதில் குன்றத்தூரைச் சேர்ந்த மணி மற்றும் அம்பத்தூர் ஜான் சுந்தர் ஆகியோர் தலையில் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மாரிமுத்து, மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில் இது இருசக்கர விபத்து என எண்ணி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது ரேஸ் வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து, இந்த விபத்து ஆட்டோ ரேசால் நிகழ்ந்தது உறுதி செய்யபடுத்தப்பட்டு தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.