Published on 11/01/2021 | Edited on 11/01/2021

தபால்துறையில் உள்ள தபால்காரர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு விண்ணப்பப் படிவங்களை வெளியிட்டுள்ளது.
அந்த விண்ணப்பப் படிவங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தகவல்கள் கேட்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் இந்த விண்ணப்ப படிவத்தை நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும், அவர்கள் நடத்தும் தேர்வும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அமைந்திருப்பதால் தமிழக மாணவர்கள் மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.
இதனைக் கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தபால் பணிக்கான விண்ணப்ப படிவங்களை எரித்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.