விமான சேவையில் இருக்கும் சிக்கல் குறித்து மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் விமானசேவை குறித்த அவரது கேள்விகளும், அத்துறை அமைச்சகத்தின் பதிலையும் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய விமானங்கள் அடிக்கடி சந்திக்கும் கோளாறுகள் குறித்த விபரம், அடிக்கடி விமானங்கள் ரத்து ஆகும் பிரச்சனை, விமான விபத்துகளைத் தவிர்க்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விபரம் தருக என்ற எனது கேள்வி மனுவிற்கு, ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு 28.11.2024 அன்று நாடாளுமன்ற மக்களவையில் அளித்த பதில் அறிக்கையில், ஆண்டுக்கு சுமார் 500 முறை விமான கோளாறுகள் ஏற்படுவதாக தகவல் தரப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 11.10.2024 அன்று திருச்சி விமான நிலையத்தையே பெரும் அச்சத்திற்கு ஆளாக்கிய IX613 AirIndia express விமான கோளாற்றுக்குரிய காரணத்தை நான் வினாவில் கேட்டதோடு அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விபரம் கேட்டிருந்தேன். அதற்கு, Hydraulic System A பகுதியின் pressure module உடைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அதனை மாற்றி, பல கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பே அந்த விமானம் பாதுகாப்பாக மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பக் கோளாறுகளை குறைக்கும் நடவடிக்கைகளாக அனைத்து விமானங்களும் தயாரிப்பு நிறுவன வழிகாட்டுதல்கள் மற்றும் DGCA (Directorate General of Civil Aviation) உத்தரவுகளை பின்பற்றி விமானங்கள் பராமரிக்கப்படுவதையும், CAR145 உத்தரவின்படி பராமரிப்பு நிறுவனங்கள் செயல்படுவதையும் உறுதி செய்கிறது என்று அந்த பதில் அறிக்கையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் இந்த பதில் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட நான், டெல்லியிலிருந்து சென்னைக்கு திரும்பிய (AI0537) விமானத்தில் இரண்டு கழிப்பிடத்தில் ஒன்று பழுது எனக் கூறி பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானோம். இப்படித்தான் இன்றும் நமது விமான சேவையின் தரம் உள்ளது.
இத்துடன் கடந்த 21.11.2024 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 6 விமானங்களும், வந்து சேர வேண்டிய 6 விமானங்களும் மொத்தம் 12 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது. இந்த 12 விமானமும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ஆகும். அதற்கு அவர்கள் கூறியது “நிர்வாக காரணம்” என்று மட்டும்தான்.
இதுபோல இப்போதெல்லாம் விமானங்கள் ரத்து என்ற செய்தி அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறது. இதனால் பயணிகள் அடையும் சிரமங்கள் குறித்தோ, பொதுமக்கள் விமான சேவை மீது கொண்டிருந்த நம்பிக்கை, அவநம்பிக்கையாவது குறித்தோ எவ்வித அக்கறையும் இந்த நிறுவனங்களுக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அது மட்டுமல்ல, மிகவும் முக்கியமாக கொரோனா தொற்று காலத்தில் திருச்சி மற்றும் தோகா இடையிலான விமான சேவையை வாரத்திற்கு மூன்று முறை என இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 500 டன்னுக்கும் மேற்பட்ட ஏற்றுமதி சரக்குகள் கையாளப்பட்டது. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் இந்த வழித்தட சேவை நிறுத்தப்பட்டது.
திருச்சி - துபாய் இடையிலான வாராந்திர விமான சேவை மே 15 2023இல் நிறுத்தப்பட்டது. மேலும், 90 விழுக்காடு இருக்கைகள் நிரப்பப்பட்டும், 2 டன் ஏற்றுமதி பொருட்களுடன் வெற்றிகரமாக செயல்பாட்டில் இருந்த திருச்சி - அபுதாபி இடையிலான வாராந்திர விமான சேவையை நிறுத்தியதும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும் மேற்கொள்ளப்பட உள்ள சென்னை - குவைத் தினமும் இயக்கப்படும் விமான சேவையை நிறுத்தும் முடிவை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சென்னைக்கு பதிலாக பெங்களூருவில் இருந்து ஜித்தா செல்லும் படி விமான வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து குறிப்பாக அமீரகங்களுக்கு செல்லும் பல பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டதாக எனக்கு சந்தேகம் உள்ளது. இதனால் market diversion tactics எனப்படும் செயற்கைத் தனமாக சந்தையை மடைமாற்றும் சில உள்ளடி வேலைகள் நடத்தப்பட்டு, திருச்சிக்கு பதிலாக பெங்களூர் ஹைதராபாத் தனியார் விமான நிலையங்களுக்கு கூடுதல் விமான சேவை மேற்கொள்ள உதவி செய்யப்படுகிறதோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.
தமிழ்நாட்டு ஏழை எளிய மக்கள் பெருமளவில் பயன்படுத்தும் அமீரக விமான சேவையை இப்படி வெளி மாநிலத்திற்கு மாற்றுவது உள்நோக்கம் உடையதாக இருக்குமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதற்கான எனது இரண்டு தீர்வுகளை முன் வைக்க விரும்புகிறேன்.
தீர்வு 1: தமிழ்நாடு குறிப்பாக திருச்சி - அமீரக வழித்தடங்களில் இயக்க தயாராக இருக்கும் வெளிநாட்டு விமான நிறுவனங்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்.
தீர்வு 2: முதல் கட்டமாக வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட அமீரக விமான வழித்தட சேவைகளை மீண்டும் திருச்சி மற்றும் சென்னைக்கு கொண்டு வர வேண்டும்.
அத்துடன் தேவைக்கு ஏற்றவாறு சென்னை மற்றும் திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கான கூடுதல் விமான சேவையை உருவாக்கிட வேண்டும்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவும், மேற்கண்ட விபரங்களுடன் ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சரை விரைவில் சந்தித்து உரையாடவும் திட்டமிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.