
பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் மதுரை மாவட்டம் வலையங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது வைகோ பேசுகையில், “மதுரை மக்கள் இன்றைக்கு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால் சொன்னால் அதற்கு முக்கிய காரணம் வைகோ. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க நடந்த முயற்சிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தேன். முல்லை பெரியாறு அணையை காக்க 3 முறை நடைப்பயணம் சென்றுள்ளேன். இதுவரை மொத்தம் 7 ஆயிரம் கிமீ நடை பயணம் சென்றுள்ளேன். எங்குமே பங்களாவிலும், ஸ்டார் ஓட்டலிலும் தங்கி ஓய்வெடுக்கவில்லை. அரசியலுக்காக நான் நடை பயணம் வரவில்லை. தமிழக நலனுக்காகவே உழைத்தேன். எங்கும் கட்சி கொடி பிடிக்கவில்லை. நியூட்ரினோ வரக்கூடாது என தடுக்க வழக்கு தொடர்ந்தேன். இது கனவு திட்டம் என பிரதமர் மோடி சொன்னார். இருப்பினும் நான் நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளேன்.
ஸ்டெர்லைட் திட்டத்தை தடுக்க பலகட்ட போராட்டங்களை நடத்தினேன். ஸ்டெர்லைட் அதிபர் என்னிடம் பேச முயன்றார். மறுத்துவிட்டேன். நாட்டின் அட்டர்னி ஜெனரல் டெல்லியிலில் இருந்து வந்து என்னை சந்தித்தார். ஸ்டெர்லைட் பற்றி தவறாக புரிதல் உள்ளதால் அது குறி்த்து விளக்கம் அளிக்க வந்ததாக கூறினார். ஸ்டெர்லைட், நியூட்ரினோவை தடுத்தது பொது நன்மைக்காக. இந்த வழக்கில் நானே வாதாடினேன். இதற்காக கட்டணமாக நான் ஏதும் பெறவில்லை.
மேகதாது அணை திட்டம் கூடாது எனக் கூறி 12 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்தினேன். தஞ்சாவூர் திருவாரூர் என ஊர், ஊராக சென்று மேகதாது திட்டத்தின் பாதிப்பை மக்களிடம் விளக்கி கூறினேன். நாட்டுக்காக, ஈழத்தமிழர்களுக்காக, தமிழக உரிமைகளுக்காக தன்னுடைய குடும்பம் பெரியளவில் தியாகம் செய்திருக்கிறது. நான் பேச நினைத்ததெல்லாம் எனது மகனுக்கு எப்படி தெரியும் என்று தெரியவில்லை. பதவிக்காகவோ, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவோ துரை வைகோ அரசியலுக்கு வரவில்லை” என தெரிவித்தார்.