தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா மணிகண்டன். மினிபேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 6ஆம் தேதி கஞ்சா வியாபாரிகள் குறித்து அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் சிவா மணிகண்டன் புகார் அளித்திருந்தார். அந்த புகார் குறித்து, காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்த நாளான கடந்த 7ஆம் தேதியன்று அய்யம்பேட்டை பகுதியில் சிவா மணிகண்டனை மர்மநபர்கள் சிலர் நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனை தொடர்பாக சிவா மணிகண்டன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், அவரை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே, சிவா மணிகண்டனின் கொலைக்கு முதல் நாள் இரவே புகார் அளித்த போதிலும் காவக் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட சரக டிஐஜி, காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.