தமிழகம் நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்களில் பெரும்பாலானவை அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து , வருகின்ற 3-ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள், "குடிநீர் தேவைக்காக மட்டுமே நாங்கள் நிலத்தடி நீர் எடுக்கிறோம். தொழில்துறையின் தேவைக்காக எடுக்கவில்லை. குடிநீர் ஆலைகள் எளிய முறையில் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெற அரசு உடனடியாக கொள்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் "நீர் எடுக்கக்கூடிய பகுதிகள் 4 பகுதிகளாக வரையறுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் உரிமம் வழங்கப்படுகிறது. குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு உரிமம் வழங்குவதில்லை என்ற புகாரில் உண்மையில்லை. நிலத்தடி நீரை எடுக்க வகுக்கப்பட்ட வரைமுறைகளின்படி ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது" என்று கேன் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.