சேலத்தில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள உயர்மட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஜூன் 7ஆம் தேதி திறந்து வைக்க, முதல்வர் சேலம் வருவதாக தகவல்கள் பரவிய நிலையில், ஜூன் 12இல் மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகே, ஈரடுக்கு மேம்பாலம் திறந்து வைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, கடந்த 2016 பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 5 சாலை, குரங்குசாவடி பகுதிகளில் இருந்து உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். சேலம் குரங்குசாவடி பகுதியில் தொடங்கி சாரதா கல்லூரி சாலை வரை ஒரு பிரிவாகவும், குரங்குசாவடி முதல் சிறுமலர் பள்ளி வரை இன்னொரு பிரிவாகவும் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தன.
உயர்மட்டப் பாலம் கட்டும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கனவுத்திட்டமாகக் கருதி, அடிக்கடி நேரில் பார்வையிட்டு பணிகளை வேகப்படுத்தினார். இதில், 5 சாலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை உயர்மட்ட ஈரடுக்கு மேம்பாலமாக கட்டப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 5 சாலை முதல் சாரதா கல்லூரி சாலை வரையிலான புதிய மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
இதையடுத்து, ஈரடுக்கு மேம்பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 6ஆம் தேதி (நாளை) மாலை சென்னையில் இருந்து சேலம் வருவதாகவும், மறுநாள் (ஜூன் 7) மேம்பாலத்தைத் திறந்து வைக்க உள்ளதாகவும் அ.தி.மு.க.வினர் மத்தியில் தகவல்கள் பரவின. இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறப்பதற்காக தமிழக முதல்வர், 11ஆம் தேதி மாலையில் சேலம் வர இருப்பதாகவும், அதற்கு முன்னதாக மேம்பாலத் திறப்பு விழா நடத்த வாய்ப்புகள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ''ஈரடுக்கு மேம்பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைத்தல், பாலத்தின் அடியில் அழகுபடுத்தும் பணிகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. பாலத்தின் பக்கவாட்டில் புதிதாக வர்ணம் பூசும் பணிகளும், மழைநீர் சேகரிப்பு குழாய்கள் பொருத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இறுதிக்கட்ட பணிகள் முடிந்த பிறகே மக்கள் பயன்பாட்டுக்காக இந்த மேம்பாலம் திறக்கப்படும். ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் இந்தப்பாலத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன,'' என்றனர்.