







குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னெடுப்புகளை குடியரசு தலைவர் வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகை புரிந்துள்ளார். சென்னை வந்துள்ள திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்திக்க இருக்கிறார். இதற்காக நேற்றே அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்புவிடுத்திருந்த நிலையில் தற்பொழுது நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு இபிஎஸ் மட்டும் அவரது ஆதரவாளர்கள் உடன் ஓபிஎஸ் இன்னும் வரவில்லை. இருப்பினும் திரௌபதி முர்முவை ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு தனித்தனியாக சந்திக்கும் என்று கூறப்படுகிறது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார், செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் முதலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களைச் சந்திக்கும் திரௌபதி முர்மு, அதற்கடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதற்கடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அடுத்து தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் இப்படி பல்வேறு கட்டங்களாக கூட்டணிக் கட்சி தலைவர்களை திரௌபதி முர்மு சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.