Skip to main content

கீழ்நிலை தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் இருவர் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020
Namagiripettai

 

 

புதிதாக கட்டப்பட்ட கீழ்நிலைத் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை அருகே முனியப்பன்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் செந்தில்குமார். இவர், அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு 10 அடி ஆழம் கொண்ட கீழ்நிலைத் தண்ணீர் தொட்டியும், ஒரு கழிவுநீர்த் தொட்டியும் (செப்டிக் டேங்க்) ஒரு மாதத்திற்கு முன்பு கட்டப்பட்டது. 

 

இந்த தண்ணீர் தொட்டி கட்டும்போது உதவியாக இருக்க மரங்களால் ஆன முட்டுகள் பொருத்தப்பட்டன. அவற்றை அகற்றும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) நடந்தது. முட்டு பலகைகள் அடிக்கும் வேலைகள் செய்து வரும் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் (45), அவருடைய உதவியாளர் கதிரேசன் மகன் சஞ்சய் (23) ஆகிய இருவரும் முதலில் தொட்டிக்குள் இறங்கினர். கீழே இறங்கிய சில ஓரிரு நிமிடங்களிலேயே அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அங்கேயே மயங்கி விழுந்தனர். 

 

இதைப்பார்த்த கட்டிட தொழிலாளர்கள் வெங்கடாசலம் மகன் சிரஞ்சீவி (24), சின்னான் மகன் முருகன் (37), வரதன் மகன் ஆறுமுகம் (32) ஆகிய மூன்று பேரும் தொட்டிக்குள் இறங்கி, அங்கே மயக்கத்தில் கிடந்த இருவரையும் காப்பாற்ற முயன்றனர். 

 

sanjay-murugesan

                                                                      சஞ்சய்,      முருகேசன்

 

அப்போது அவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர்கள் தொட்டியில் இருந்து மேலே ஏறி வந்தனர். ஆனாலும் மூச்சுத்திணறலால் அவர்களும் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் இருந்த சிலர் தொட்டிக்கு மேலே தரையில் மயங்கிக் கிடந்த மூவரையும் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து நாமகிரிபேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் இளங்கோ மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள், தொட்டிக்குள் மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் மூச்சுத்திணறலால் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இரண்டு சடலங்களும், உடற்கூறு ஆய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், எம்பி சின்ராஜ், ராசிபுரம் வட்டாட்சியர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். 

 

விஷ வாயு தாக்கி கூலித்தொழிலாளிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் நாமகிரிபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்