Skip to main content

வன விலங்குகள், நீர்நிலைகளுக்கு பாதிப்பு இல்லாமல் பசுமை சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுகிறதா? மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
ew

 

வன விலங்குகள் மற்றும் நீர்நிலைகளுக்கு பாதிப்பு இல்லாமல் சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

எட்டு வழி சாலைக்கு  நிலம் கையகப்படுத்தும் முன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்ரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சேலம் முதல் சென்னை இடையிலான மாவட்டங்களில் ஏற்கனவே நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ள நிலையில், காடுகளை அழித்து தார் சாலை அமைத்தால் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என வாதத்தை முன்வைத்தார்.

 

அப்போது அரசு தரப்பில் ஆஜராகி தலைமை வழக்கறிஞர் சென்னை சேலம் 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து நேற்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

அப்போது குறுக்கிட்டு மனுதாரர் சூரியபிரகாசம் சாலை திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை எனவும், ஆனால் இயற்கை வளங்கள், வன விலங்குகள், நீர் நிலைகளை கையகப்படுத்தி திட்டம் நிறைவேற்றப்படக்கூடாது எனபதாலேயே வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

 

அதை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

மேலும், புதுக்கோட்டையில் நீர்நிலைகளின் குறுக்கே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பான மேல்முறையீடு வழக்குடன் இதை இணைத்து பட்டியலிடுவதாகவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இரு வழக்குகளும் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது குறித்து விரிவான உத்தரவை பிறப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்