The document is important ... Election flying squad

தேர்தல் நேரத்தில், வியாபாரத்திற்காகப் பணம் கொண்டு செல்வோர் அதற்குரிய ஆவணங்களுடன் வந்தால் மட்டுமேவிடுவிக்கப்படுவர் என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கறார்காட்டுவதால், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. கடந்த பிப். 26ம் தேதி மாலை, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஒருவர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisment

அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப்பொருட்களோ கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறானகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆவணமின்றி எடுத்துச் செல்லும், பரிசுப்பொருட்களைக் கண்காணிப்பதற்காகப் புதிதாக தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த உத்தரவால், பெரும்பாலும் சிறு, குறு வியாபாரிகள் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாகவும் அதிருப்தி கிளம்பியுள்ளன.

Advertisment

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைஅடுத்த மெட்டாலா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மார்ச்2ம் தேதி காலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக முட்டை லோடு ஏற்றிச் செல்வதற்காக இரண்டு லாரிகள் வந்தன. அவற்றை மடக்கிப்பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவற்றில் ஒரு லாரி ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வந்ததும், அதில் ஆவணமின்றி 5 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னொரு லாரி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து வந்திருப்பதும், அதன் ஓட்டுநரிடம் ஆவணங்களின்றி 65 ஆயிரம் ரூபாய் இருந்ததும் தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள், நாமக்கல் மாவட்டத்தில் முட்டை வாங்கிச் செல்ல வந்ததாகக் கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், இரண்டு ஓட்டுநர்களிடம் இருந்தும் 5.65 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அத்தொகையை, ராசிபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல், ராசிபுரம் ஆண்டளூர் கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், மார்ச் 2ம் தேதி காலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, லாரி ஓட்டி வந்த ஓட்டுநரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர், கோழி வியாபாரத்திற்காக வந்ததாகக் கூறினார். எனினும், அவரிடமும் அத்தொகைக்கு உண்டான ஆதாரங்கள் இல்லை.

ராசிபுரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஒரே நாளில், ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக 6.55 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வியாபாரம் நிமித்தமாக பணம் கொண்டு செல்வோர், பணத்தை வங்கியில் இருந்து எடுத்திருந்தால் அதற்கான ரசீது, என்ன வியாபாரமோ அது தொடர்பான பில் ரசீதுகள், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ரசீதுகள் ஆகியவற்றைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் தேர்தல் பறக்கும் படையினர்.

இதுபோன்ற ஆவணங்கள் இல்லாவிட்டால் எடுத்துச் செல்லப்படும் தொகை பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். ஆவணமின்றி கோரப்படாத தொகை, வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்கின்றனர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.