செல்ஃபோன் பறித்துச் சென்ற ரவுடியை விரட்டிப் பிடித்த கர்ப்பிணி பெண் காவலரின் துணிச்சலையும், கடமை உணர்வையும் பாராட்டி 1 லட்சம் ரூபாய் பரிசளித்துப் பாராட்டியிருக்கிறார்கள் சூர்யா மருத்துவமனை டாக்டர்கள். அந்தப் பெண் காவலருக்கு உயரதிகாரிகளின் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது.
சென்னை பேசின் பாலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் சுசீலா. இவர் கடந்த 24-ந் தேதி பேசின் பாலம் ரயில் நிலையத்திலிருந்து காவல் நிலையத்துக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். காவல் நிலையம் அருகே பேருந்து சென்றபோது பேருந்தில் இருந்த ஒருவர் தனது மொபைல் ஃபோன் திருடப்பட்டு விட்டதாகக் கதறினார். இதைப் பார்த்த பெண் காவலர் சுசீலா, பேருந்தில் பயணம் செய்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். பேருந்தில் சந்தேகப்படும்படி இருந்த இரண்டு நபர்களைப் பிடித்து விசாரித்தார். அப்போது, பெண் காவலர் சுசீலாவை தள்ளிவிட்டு ஒருவர் தப்பியோடினார்.
மற்றொருவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த பெண் காவலர் சுசீலா, பேசின் பாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், சுசீலா நடத்திய விசாரணையில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டது புளியந்தோப்பு திருவிக நகரைச் சோ்ந்த 36 வயதுடைய ஜாபா் ஷெரீப் என்பது தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட ரவுடியை விரட்டிப் பிடித்த மூன்று மாத கர்ப்பிணியான சுசீலாவின் துணிச்சலை மக்கள் வியந்து பார்த்தனர். இந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்தும் தனது கடமையை மறக்காத பெண் காவலர் சுசீலாவின் தைரியத்தை பாராட்டி 1 லட்சம் ரூபாய் பரிசளித்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீகுமார். இந்தப் பரிசளிப்பு நிகழ்வில் காவல்துறையின் டெபுடி கமிஷனர், சூர்யா மருத்துவமனையின் டாக்டர்கள் அனந்தகுமார், ராஜீவ் ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பரிசளித்து பாராட்டிய டாக்டர் ஸ்ரீகுமார், "உங்களின் துணிச்சல் மற்றவர்களுக்கும் ஒரு ஊக்க சக்தி" என்று வாழ்த்தினார். இந்த நிலையில், சுசீலாவை காவல்துறை உயர் அதிகாரிகளும் பாராட்டினர்.