கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரூபாய் 10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான நிலத்தகராறில், கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தது.
அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரித்த காவல்துறையினர், ஜேம்ஸ் சதீஷ்குமார், பொன்னுசாமி, மேரி புஷ்பம், போரிஸ், வில்லியம்ஸ், பேசில், யேசுராஜன், முருகன், ஐயப்பன், செல்வ பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று (14.06.2024) அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, 2 பேருக்கான ஆயுள் தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.