ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஜீவானந்தம். இவர் கடந்த 20 வருடங்களாக 'தமிழக பசுமை இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்திவந்தார். மேலும், சுற்றுச்சூழல் இயக்கப் போராளியாகத் திகழ்ந்து வந்தார். அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஒரு மார்க்சிய சிந்தனையாளர், செயற்பாட்டாளர். தந்தை பெரியாரின் கருத்துகள், மகாத்மா காந்தியின் காந்தியத் தத்துவங்களை மார்க்சிய சித்தாந்தத்தில் ஒப்பிட்டு, அதற்கான வாழ்வியல் சூழலை வெளிப்படுத்தியவர். ஏராளமான மருத்துவமனைகள் கல்விக் கூடங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலரோடும் இவரின் குடும்பம் மிக நெருக்கமாக இருந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில், இலக்கியப் பேராசான் ஜீவானந்தம், பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பல தலைவர்களும் இவரது வீட்டில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். பல அறிய வெளிநாட்டு நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் தனி முத்திரை பதித்து வந்தவர் டாக்டர் ஜீவானந்தம். இன்று (02/03/2021) பகல் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக டாக்டர் ஜீவானந்தம் காலமானார்.
இவரின் இறப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுவுடைமை இயக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.