விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள சரவணம்பாக்கம் ஊரைச் சேர்ந்தவர் ராஜன் என்பவரது மகன் ரோபின்(22). இவர், அதே ஊரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் மற்றொரு ஊழியரை நேற்று முன்தினம் இரவு அவரது ஊரான மேட்டுக்குப்பம் பகுதியில் விட்டுவிட்டு, மீண்டும் திருக்கோவிலூர் - மடப்பட்டு சாலை வழியாக மருத்துவமனைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது மேட்டுக்குப்பம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி அருகே அவரது இரு சக்கர வாகனத்தை 25 வயது மதிக்கத்தக்க மர்ம வாலிபர் நிறுத்தியுள்ளார். அப்போது வாகனத்தை விட்டு கீழே இறங்கிய ரோபினிடம் அந்த இளைஞர், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். ரோபின் தன்னிடம் இருந்த நூறு ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். மேலும், தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், அந்த வழிப்பறி கொள்ளையன் செல்போனில் கூகுள் பே மூலம் தனக்கு பணம் அனுப்புமாறு மிரட்டியுள்ளார்.
தனது வங்கிக் கணக்கில் பணமில்லை, அதனால் கூகுள் பே மூலமும் பணம் அனுப்ப முடியாது என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வழிப்பறி கொள்ளையன், தான் வைத்திருந்த கத்தியால் ரோபினின் மொபைல் போனை குத்தி சிதைக்க முயன்றுள்ளார். இதில், சுதாரித்துக் கொண்ட ரோபின் அந்த வழிப்பறிக் கொள்ளையனிடம் பேசிக் கொண்டே மொபைல் போன் மூலம் மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையிலிருந்த மருத்துவர் காவிய வேந்தன் மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் உடனடியாக வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது ரோபின் கால் மற்றும் கை பகுதியில் கத்தியால் குத்தி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கொள்ளையனைப் பிடிக்க முயன்றனர். அவர் மருத்துவர் காவிய வேந்தனையும் கத்தியால் தாக்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து உடனடியாக திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதோடு, வழிப்பறி கொள்ளையன் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.