பள்ளி, கல்லூரி மாணவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் புகையிலை, போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கல்வி நிலையங்களுக்கு அருகிலேயே விற்பது தவறு என அரசால் எச்சரிக்கப்படும்பொழுதும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதன் மீதான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி வளாகத்திற்கு அருகே போதைப்பொருள் விற்றவர்களுக்கு ஜாமீன் வேண்டுமென்றால் அரசுப் பள்ளிகளுக்குக் கழிவறை கட்ட நிதி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை உயர்நீதிமன்ற கிளை கொடுத்துள்ளது.
பள்ளி வளாகத்திற்கு அருகே போதைப்பொருட்களை விற்பனை செய்த வழக்கில் தென்காசியைச் சேர்ந்த மகேஸ்வரி, தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், மதுரை மேலூரைச் சேர்ந்த முரளி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் மூவரும் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தென்காசியைச் சேர்ந்த மகேஸ்வரி அவரது கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குக் கழிவறை கட்ட 1.50 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும், மதுரை மேலூரைச் சேர்ந்த முரளி ஒத்தக்கடை பெண்கள் பள்ளிக்கு 25,000 ரூபாய் மதிப்பில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் வழங்க வேண்டும், அந்தோணி தூத்துக்குடி அரசு மகளிர் பள்ளிக்குக் கழிவறை கட்ட 50 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என நிபந்தனை விதித்த நீதிமன்றம், நிபந்தனையை ஏற்றால் ஜாமீன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.