மாணவர்கள் சாதி ரீதியான அடையாளங்களை பயன்படுத்த கூடாது என தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமீப காலமாக அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, சக மாணவர்களை தாக்குவது, போதை பொருட்களை பள்ளியிலேயே பயன்படுத்துவது என பல்வேறு வீடியோ காட்சிகள் வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அண்மையில் நெல்லையில் அரசு பள்ளியில் குறிப்பிட்ட சமூக அடையாளத்தை வெளிப்படுத்தும் கயிறு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் சக மாணவர்களால் கல்லால் தாக்கப்பட்டு ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே சாதிய ரீதியிலான மோதல்கள் அதிகரித்து வருவது சமூக அமைதியை நிலைகுலைய வைத்துள்ளது. அதுவும் சமூக வலைத்தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த காலகட்டத்தில் இதுதொடர்பான வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் மாணவர்கள் சாதி ரீதியான அடையாளங்களைப் பயன்படுத்த கூடாது, சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கையில் வண்ணக்கயிறுகளை அணியக்கூடாது, பள்ளியில் சாதிப்பிரிவினையைத் தூண்டுவோர் மீது கடும் எச்சரிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை ஆசிரியர்கள் எச்சரிக்க வேண்டும் என தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.