தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில், ஒரு அங்குலத்தைக் கூட ஆக்கிரமிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், இத்தலார் என்ற கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையை, அந்த பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ஹாலன், லீலாவதி மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர்.
இத்தலார் கிராமத்தில் உள்ள 150 குடும்பங்களுக்கு நீராதாரமாக உள்ள இந்த நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல், மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்குக் கிராம மக்கள் பல முறை மனு அளித்திருந்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து, சீனிவாசன் உள்ளிட்ட 4 பேர் ஆக்கிரமித்துள்ள இந்த நீர்நிலையை மீட்கக்கோரி, இத்தலார் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘150 குடும்பங்களுக்கு நீராதாரமாக உள்ள இந்த நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கோடை காலங்களில் கடும் நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல், பல அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலையை ஆய்வுகூட செய்யாமல், தங்களை அலைக்கழித்தனர்.’ என மனுதாரர் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதனைக் கேட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்துபோகும். தமிழகத்தில் ஒரு அங்குலம் நீர்நிலை பகுதியைக்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது. மேலும், இத்தலார் கிராமத்தில் நான்கு பேரால் ஆக்கிரமிக்கப்பட்ட 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையை மீட்டு, அது தொடர்பான அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.