Skip to main content

இந்தி திணிப்பிற்கு எதிராய் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

DMK youth protest against imposition of Hindi...
கோப்பு படம்

 

ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

 

1976ம் ஆண்டு அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு முதல் முறையாக அலுவல் பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. மக்களவை உறுப்பினர்கள் 20 பேர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேர் என 30 பேர் இக்குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

 

தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இக்குழு செயல்படுகிறது. கடந்த மாதம் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இக்குழு அதன் 11ஆவது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை 112 பரிந்துரைகளை கொண்டிருந்தது.

 

அனைத்து மத்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கை கூறியது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்” என்று காட்டமாக அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

 

மேலும் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “இந்தி எதிர்ப்பு போரட்டம் என்பது புதிது அல்ல. திராவிடர் கழகம் தோன்றிய காலத்தில் இருந்து துவக்கப்பட்ட போராட்டம் தான் இது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்தி மொழித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். நேற்று முன் தினம் இங்கு வந்த மத்திய இணை அமைச்சர் கூட இங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிற மாணவர்களுக்குக் கூட அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார்.

 

எனவே நுழைவுத்தேர்வு, இந்தி திணிப்பு ஆகியவற்றை எதிர்த்துத்தான்  இளைஞரணி மாணவரணி இணைந்து போராட்டம் நடத்தும். ஆகவே, மீண்டும் வரலாறு திரும்பும் சூழ்நிலை உருவாகாமல் இருக்க வேண்டும். இதற்குமுன் நடந்த மொழிப்போரிலே பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி இன்றும் தொடர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துதான் போராட்டம் நடைபெற இருக்கிறது” என்றும் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. திமுகவின் இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பள்ளி கல்லூரி மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 10 மணிக்கு துவங்கிய இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தின் காரணமாக காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்