Skip to main content

"இந்திய நாட்டுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு டாடி"- உதயநிதி ஸ்டாலின் பேச்சு! 

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

தி.மு.க இளைஞர் அணியில் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (13/02/2020) கடலூர் மாவட்டத்தில் தொடங்கியது. 


கடலூர் கிழக்கு மாவட்டம் வடலூரில் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க இளைஞரணியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

dmk younth wing udhayanidhi stalin speech at vadalur

பின்பு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இந்தியா முழுக்க மோடி இருந்தாலும் தமிழகத்தில் எனது டாடி தான். உள்ளாட்சித் தேர்தல் சரியான நேரத்தில், சரியான முறையில் நடைபெற்று இருந்தால் திமுக 90 சதவீத வெற்றியை பெற்றிருக்கும். தமிழகத்தில் நடைபெறும் கேடுகெட்ட அ.தி.மு.க ஆட்சிக்கும், மத்தியில் உள்ள பாஜக ஆட்சிக்கும் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட தயாராகி விட்டனர்.
 

தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது. தமிழ்நாட்டில் ஒரு நடிகர் அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என கூறி வருகிறார். இந்த பேச்சு நான் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே கேட்டு வருகிறேன். அந்தப் பேச்சைப் பற்றியெல்லாம் நமக்கு தேவையில்லை. நாம் நமது பணியினை சரியாக செய்திட வேண்டும்" என்றார். 

dmk younth wing udhayanidhi stalin speech at vadalur

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "தி.மு.க இளைஞர் அணியில் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி இன்று (13/02/2020) முதன் முதலில் கடலூர் மாவட்டத்தில் துவங்கியுள்ளோம். படிப்படியாக தமிழகம் முழுவதும் வழங்கப்படும். டி.என்.பி.எஸ்.சி முறைகேடு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெறுகிறது. அது சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என கழக தலைவர் கூறியிருக்கிறார். சி.பி.ஐக்கு மாற்றினால்தான் உண்மை குற்றவாளிகள் யார் என தெரியவரும். அதுதான் என்னோட கருத்தும். மாநில அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக காவிரி டெல்டாவை அறிவித்துள்ளது. இது வெற்று அறிவிப்பு. தமிழக அரசு மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறது. மக்களுக்கு பாதகமான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என தலைவர் கூறியிருக்கிறார். அதே கருத்துதான் என்னுடைய கருத்தும்" என்றார்.
 

இதேபோல் மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நெய்வேலியில் மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் கடலூர் எம்.பி.டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், துரை. கி.சரவணன் எம்.எல்.ஏ, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்