Published on 16/06/2021 | Edited on 16/06/2021

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தக்கோரி டெல்லியில் உள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டி.ஆர்பாலு, "தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கும் தனித்தனியாக குறிப்பாணை வெளியிட்டு தனித்தனியாகத் தேர்தல் நடத்த வேண்டும். மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கும் விரைவாக தேர்தல் நடத்த சட்ட ரீதியான கருத்துகளைக் கூறியுள்ளோம். பெரும்பான்மை இருப்பதால் நாங்கள் வெற்றி பெறுவோம். தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே தேர்தல் அறிவிப்பை வெளியிட தாமதம் செய்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.