திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
கரோனா இரண்டாவது அலை உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அதிலும், இந்தியாவில் அதன் தாக்கம் வேகமாகவும், கோரமாகவும் இருக்கிறது. ஒருநாளில் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்குப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. நோய்த் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கவலையையும் வேதனையையும் அளிக்கிறது.
மக்களின் உயிர் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு அயராது பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் சேவை போற்றுதலுக்குரியது. அவர்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்குப் போதிய அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாசிக் முதல் தமிழ்நாட்டின் வேலூர் வரை பலர் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சைப் பிளக்கிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களிலும் உயிரிழப்புகள் தொடர்கின்றன.
மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசு என்றால் மக்கள் நல்வாழ்வுத்துறையை எத்தகைய கட்டமைப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதற்கு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு முன்னுதாரணமாகவும், தொலைநோக்குடனும் செயலாற்றியிருப்பதை இந்தக் கரோனா காலத்தில் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
கரோனாவிலிருந்து மக்களைக் காப்பதற்கான தடுப்பூசிகள் மே 1ஆம் தேதி முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தடுப்பூசி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை முதல் தவணை ஊசி போடச் சென்றவர்களும், இரண்டாவது தவணை ஊசிக்கான காலக்கெடு நெருங்கியவர்களும் வேதனையோடு குறிப்பிடுவதை ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் காண முடிகிறது.
அனைவருக்கும் தடுப்பூசி என்றும், மருந்துகளை மாநில அரசுகளே நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்த நிலையில், தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையைக் கடுமையாக உயர்த்தியிருப்பது மாநிலங்கள் மீது ஏற்றப்பட்டுள்ள பெரும் சுமையாகும். இந்தச் சுமை, மக்களைத்தான் பாதிக்கும். பேரிடர் நேரத்தில், மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான முடிவுகளை எடுத்து உதவிக்கரம் நீட்டுவதே ஆட்சியாளர்களின் கடமை. அதற்கு மாறாக, தடுப்பூசி தட்டுப்பாடு - விலையேற்றம், கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் ஊசி மருந்து பற்றாக்குறை எனச் செய்திகள் வருவது மக்களுக்கு அவநம்பிக்கையையே ஏற்படுத்தும். அவர்களின் அச்ச உணர்வை அதிகரிக்கச் செய்யும். தேவையற்ற பதற்றம், நோயைவிட அதிகப் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இவற்றையெல்லாம் உணர்ந்து மத்திய ஆட்சியாளர்களும், மாநில அரசின் நிர்வாகத்தைக் கவனிப்பவர்களும் போர்க்கால அடிப்படையில் செயலாற்ற வேண்டிய நேரம் இது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆட்சிக்கு வரும் காலம் கனிந்திருக்கின்றபோதும், மக்கள் நலனே முதன்மையானது எனச் செயல்படும் திராவிட முன்னேற்றக் கழகம், இந்தப் பேரிடர் காலத்திலும் களமிறங்கிப் பணியாற்றி வருகிறது.
இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட உங்களில் ஒருவனான நான், அதுகுறித்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மருத்துவர்களின் உரிய ஆலோசனைகளுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன். அதுபோலவே, மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கட்சி முன்னின்று மேற்கொண்டு வருகிறது.
இன்று (ஏப்ரல் 23) கொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம் மற்றும் திரு.வி.க. நகர் தொகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கியும், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கியும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டம் சேர்வதைத் தவிர்த்தல், பாதுகாப்பு முறைகளைக் கையாளுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் இவைதான் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளாகும்.
உங்களில் ஒருவனான நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, திமுக நிர்வாகிகளும், வேட்பாளர்களும், செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைத்து உடன்பிறப்புகளும் மக்களுக்கு உதவிடும் பணியில் களமிறங்கிச் செயலாற்றி வருவதைக் கவனித்து வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அதற்குட்பட்ட பகுதிகளிலிருந்தும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மக்களுக்குத் தொண்டாற்றிடும் கட்சியினர் அனைவரும் தங்கள் நலனிலும் அக்கறையுடன் இருந்து, பாதுகாத்துக்கொள்வது முதன்மையான கடமையாகும்.
கரோனா 2.0 எனப்படும் இந்த இரண்டாவது அலையின் உயிர்ப்பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் நம் கட்சியைச் சேர்ந்தவர்களும் மரணமடைகிற வேதனைச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தன் உயிர் போலப் பிற உயிர்களை நேசிப்பதும், பிற உயிர்களைப் போலத் தன்னுயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இந்தப் பேரிடர்ச் சூழலில் இன்றியமையாததாகும். அதனை உணர்ந்து கட்சியினர் கவனத்துடன் கடமையாற்ற வேண்டும்.
முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை. தொழில் வாய்ப்புகளை இழந்தோர், வேலையினைப் பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். அதனால், இந்த இரண்டாவது அலைத் தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் கட்சியினரும் அவற்றுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மே 2ஆம் தேதிக்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்கப் பலமாக நிற்போம்." இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.