டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க்கில் கட்டப்பட்டுள்ள தி.மு.க.வின் அலுவலகமான 'அண்ணா- கலைஞர்' அறிவாலயத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (02/04/2022) மாலை 05.00 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கின்றனர்.
'அண்ணா- கலைஞர்' அறிவாலயம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
நாடாளுமன்றத்தில் ஏழு எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில், 2013- ஆம் ஆண்டே தி.மு.க.விற்கு டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூன் மாதம் டிசம்பரில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் செட்டிநாடு கட்டட முறையில் கட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகம் உள்ள இடத்தின் அருகே தி.மு.க.வின் 'அண்ணா- கலைஞர்' அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அறிவாலயத்தின் தோற்றத்தில், இந்த 'அண்ணா- கலைஞர்' அறிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 11,000 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 'அண்ணா- கலைஞர்' அறிவாலயத்திற்கு வெளியே 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
நுழைவு வாயிலில் அண்ணா, கலைஞரின் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. முதல் தளத்தில் கட்சிப் பணிகளை மேற்கொள்ள அலுவலகங்கள், 11 பேர் அமரும் வகையில் கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தளத்தில் கட்சியின் ஒட்டுமொத்த வேலைகளை மேற்கொள்வதற்காக நவீன வசதியுடன் தனித்தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தளத்தில் கட்சியின் தலைவர், நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் தங்குவதற்கான பிரத்தியேக அறைகள் உள்ளன. தமிழர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் நுணுக்கங்களுடன் அண்ணா- கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. முரசொலி மாறன் அரங்கத்தில் கலைஞர் கருணாநிதியின் வரலாறு அடங்கிய புகைப்பட காட்சி இடம் பெற்றுள்ளது.