/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mp344.jpg)
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த கடலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்- க்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டுவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி, கடந்த செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி தொழிற்சாலை உரிமையாளரும், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, ரமேஷின் உதவியாளர்கள் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார். நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்ட ரமேஷை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், கடந்த அக்டோபர் 13- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்தனர். பின்னர் கடலூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அக்டோபர் 27- ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஜாமீன் கேட்டு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ரமேஷ் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் (22/11/2021) வந்த நிலையில், அக்டோபர் 23- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நீதிபதிகள் முன்னிலையில் நேற்று (23/10/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவராஜ், " நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரமேஷ் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப் பதிந்தும் ஓடி ஒளியாமல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கில் அவருக்கு தொடர்புள்ளதாக ஆதாரம் இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கோரினார்.
ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன், "இந்த வழக்கு தொடர்பாக 43 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கோவிந்தராஜ் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமாகியுள்ளது. எனவே விசாரணை பாதிக்கும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என்று ஆட்சேபம் தெரிவித்தார். அதேபோன்று கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் தரப்பு வழக்கறிஞர்களும், ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜவஹர் உத்தரவிட்டார்.
இதனிடையே ரமேஷின் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேருக்கு நேற்று முன்தினம் (22/10/2021) நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து, கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஐந்து பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க இரண்டு நாட்கள் அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று (23/10/2021) நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர்களை ஒரு நாள் மட்டும் விசாரணைக்கு அனுமதி வழங்கி இன்று (24/10/2021) பகல் 12.30 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர் (எ) சுந்தர்ராஜ், வினோத் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நேற்று (23/10/2021) பகல் 12 30 மணியளவில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், விசாரணையை நேற்று இரவே சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் முடித்த நிலையில், அன்று இரவே நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் நவம்பர் 2- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)