DMK Order to imprison the Member of Parliament!

Advertisment

முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், கடலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று வேலைக்குச் சென்ற கோவிந்தராஜ், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது மகனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோவிந்தராஜின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவரது மகனிடம் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கூறியுள்ளார். சந்தேகமடைந்த கோவிந்தராஜின் மகன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், கொலை வழக்காகப் பதிவுசெய்யக் கோரி, காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisment

அதைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த மறுநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ரமேஷ் எம்.பி. மீது கொலை வழக்குப் பதிவுசெய்யக் கோரி மனு அளித்தனர். ஆனால், கோவிந்தராஜ் மரணத்தை காடாம்புலியூர் காவல்துறையினர் சந்தேக வழக்காகப் பதிவுசெய்தனர். இதனிடையே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை, ஜிப்மர் மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. மறுநாளே விசாரணையைத் தொடங்கியது.

பிரேதப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் மீது கொலை வழக்கைப் பதிவு செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி. அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர, தொழிற்சாலையில் பணியாற்றிய நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், அவர் இன்று (11/10/2021) காலை பண்ருட்டி நீதிமன்றத்தின் நீதிபதி முன் ஆஜரானார். அதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தரப்பு, நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கோரியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரை அக்டோபர் 13ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.