Skip to main content

பா.ம.க. தலைவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் பகிரங்க சவால்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
DMK MLAs open challenge to PMK leaders

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்  தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் சிகிச்சையில் இருக்கும் 10 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக எம்எல்ஏக்கள் தான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், “எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்வில் இருந்து விலக தயார். அப்படி நிரூபிக்கப்படாவிட்டால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொது வாழ்வில் இருந்து விலக தயாரா?.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதானவர் திமுக நிர்வாகி இல்லை. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கட்சி ஸ்டிக்கர்கள் தான் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக உதயசூரியன் எம்.எல்.ஏ. பேசுகையில், “கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ அரசியல் ஆதாயம் வேண்டி புகார் தெரிவித்துள்ளார். எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை பாமக தலைவர்கள் வைத்துள்ளனர். 37 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர்கள் பேசியுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்