
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் (133 சட்டமன்றத் தொகுதிகள்) திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (04/05/2021) மாலை 06.00 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழுத் தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, வரும் மே 7ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் என்று திமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன.