
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் தெருத்தெருவாக சென்று தங்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் சிலர் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. தேநீர் கடையில் டீ போடுவது, ரோட்டை கூட்டுவது, பரோட்டா போடுவது, பெண் வேட்பாளர்கள் பூ கட்டுவது, குழந்தைகளுக்கு தலை வாரிவிடுதல் என விதவிதமான முறைகளில் வாக்கு சேகரித்து வருகிறார்கள். இது வாக்காளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மகாலட்சுமி கட்சி நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு ஆதரவு திரட்ட அங்கு வந்த காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் நடனமாட, அவர்களுடன் சேர்ந்து எம்எல்ஏவும் நடனமாடினார். அவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.