திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கத்தில் இருந்து வேடசந்தூர் வரை குடகனாறு செல்கிறது. ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆத்தூர் முதல் அகரம் வரை சுமார் 27 கி.மீட்டருக்கு குடகனாறு செல்கிறது. கடந்த 9 வருடங்களாக குடகனாறு தூர்வாரப்படாமல் இருந்தது. நீர்நிலைகள் மற்றும் குளங்களைத் தூர்வாரிய அதிகாரிகள் குடகனாற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இதனால் சுமார் 4 ஆயிரம் நிலப்பரப்புள்ள விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. அப்பகுதி விவசாயிகள் தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமியிடம் குடகனாற்றை தூர்வாரச் சொல்லி வேண்டுகோள் விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் இ.பெரியசாமி, தனது சொந்த நிதியில் சுமார் ரூ.90 லட்சம் மதிப்பில் குடகனாற்றை தூர்வார உத்தரவிட்டார். அதன்படி பழனி சாலையில் உள்ள பாலம் ராஜக்காபட்டி பாலத்திலிருந்து தெற்கே அனுமந்தராயன்கோட்டை பாலம் வரை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதுபோல ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கம் முதல் அனுமந்தராயன்கோட்டை பாலம் வரை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆத்தூர் சொக்குப்பிள்ளை ஓடையிலிருந்து அகரம் வரை 27 கி.மீட்டருக்கு தூர்வாரும் பணி நடைபெறுகிறது. தூர்வாரும் பணியை ரெட்டியார் சத்திரம் ஒன்றியத் தலைவர் கு.சத்தியமூர்த்தி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் முருகேசன், சித்தலகுண்டு, பொன்னிமாந்துரை நீர்ப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் வி.ஜோசப் அருளானந்தம் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.இன்பராஜ், மாவட்ட பொறியாளர் அணி செந்தில்குமார், குட்டத்துப்பட்டி ஊராட்சி பாலம்பாண்டி, மாவட்ட கவுன்சிலர் ராஜகணேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் ராயப்பரமேஷ், விவசாயிகள் சங்க துணை தலைவர் சேசுராஜ் மற்றும் மலைச்சாமி, ரவிசங்கர் உட்பட தி.மு.க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
தூர்வாரும் பணிகள் குறித்து சிந்தலகுண்டு மற்றும் தாமரைக்குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வி.ஜோசப் அருளானந்தம் கூறுகையில் “கடந்த 9 வருடங்களாக அ.தி.மு.க ஆட்சியில் கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரிடமும் தூர்வாரச் சொல்லி மனு கொடுத்தோம். எவ்வித பயனும் இல்லை. ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினருமான இ.பெரியசாமி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தவுடன் தனது சொந்தச் செலவில் விவசாயிகள் நலன் காக்க சுமார் ரூ.90 லட்சம் செலவில் தூர்வார உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆத்தூரில் இருந்து 15 கி.மீ தூரமுள்ள 360 ஏக்கர் நீர்பிடிப்பு உள்ள தாமரைக் குளத்திற்கு தண்ணீர் வருவதோடு, அதன் அருகே உள்ள அவுதார்குளம், ஐந்தான்குளம், அணைப்பட்டி குளம், கோட்டூர் ஆவராம்பட்டி குளம், வேலாசமுத்திரம் குளம் உட்பட 10க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி, மீண்டும் தண்ணீர் குடகனாற்றில் வந்து காவிரி வரை இந்த தண்ணீர் செல்லும். எங்களுடைய நீண்டநாள் கனவான குடகனாற்றை தூர்வாரிக் கொடுக்கும் தி.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி அவர்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்” என்றார்.
ஆத்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் கூறுகையில், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தி.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூரில் உள்ள கருங்குளம், நடுக்குளம் உட்பட பல்வேறு குளங்களை தூர்வாரி கொடுத்து விவசாயிகள் நலன் காத்தார். இன்று சொந்தச் செலவில் ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கத்தில் இருந்து ஆத்தூர் தொகுதி எல்லை வரை குடகனாற்றை தூர்வார உத்தரவிட்டுள்ளார். தி.மு.க நிர்வாகிகள் மற்றும் குடகனாறு பாசன விவசாயிகள் அந்தந்த பகுதியில் நின்று தூர்வாரும் பணியைக் கண்காணித்து வருகின்றனர்” என்றார். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப தொகுதி மக்களின் நலன் கருதி தனது சொந்தச் செலவில் சுமார் ரூ.90 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியைச் செய்து வரும் தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமியின் இந்தப் பணி பாராட்டுக்குரியது என்று சமூக ஆர்வலரும், விவசாயிகளும் சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினர் இ.பெரியசாமியை பாராட்டியுள்ளனர்.