கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்தை அப்போதைய முதல்வர் கலைஞர் திருத்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடல் வரிகளைக் குறைத்து தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் 1970-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் தமிழ்த்தாய் வாழ்த்தைத் திருத்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் திராவிட மொழிகள் அனைத்தையும் இணைத்து பாடல் எழுதி இருந்தார். அந்த பாடலில் தமிழைத் தவிர மலையாளம், கன்னடம் சமஸ்கிருதம் போன்ற மொழிகளை நீக்கிவிட்டு, தமிழை வாழ்த்துவதற்கான பாடலாக அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி திருத்தம் மேற்கொண்டு அதை 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்று அறிவித்தார். பாடப் புத்தகங்களிலும் முதல் பக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது. சில வரிகளை நீக்கிவிட்டு தமிழ் மட்டும் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்தது தவறு என்று 2007ஆம் ஆண்டு மோகன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில், ஒரு மாநிலத்தின் பாடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் திருத்தப்பட்டது. அதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. அதேபோல் இந்த பாடலுக்கு காப்புரிமை பெற்றவராக மனுதாரர் இல்லை என்பதால் இந்த மனுவை அபாரதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. அவற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி 1970 ஆம் ஆண்டு கலைஞரால் திருத்தப்பட்ட பாடல் 35 ஆண்டுகளுக்கு மேலாக பாடப்பட்டு வரும் நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு காத்திருந்து விட்டு இப்போது வழக்குதொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அரசின் வாதங்களை ஏற்றுக் கொள்வதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.