Skip to main content

‘நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக திறப்பு விழா காண்கிறது’ - செங்கோட்டையன் பேச்சு

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

 'DMK Inauguration sees the plans we have brought' - Sengottaiyan speech

 

அதிமுக சார்பாக 21 ஆம் தேதி ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவரது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 

“தமிழ்நாட்டில் 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தார். 5 முறை ஜெயலலிதா முதல்வரானார். பிறகு இபிஎஸ் மாநிலத்தில் ஆட்சி செய்தார். அத்திக்கடவு - அவினாசி குடிநீர் திட்டம் உட்படப் பல நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்கினார். ஆனால், திமுக ஆட்சியில் எஸ்.ஜி.எப்.ஐ விளையாட்டுப் போட்டியில் கூட மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. மின் விநியோகம் அவ்வப்போது தடைப்படுகிறது. பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை. கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் விலை, சொத்து வரி, தண்ணீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மதுவின் மூலம் திமுகவுக்கு பல கோடி ரூபாய் தினசரி கிடைக்கிறது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியின் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுகவின் ஊழலால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதியில் அதிமுக அபார வெற்றி பெறும்" என்றார்.

 

அடுத்து முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பேசும்போது, "தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தான் பிரதானமாக உள்ளது. ஆட்சியில் இருந்தவர்களுக்கு மது விற்பனை மூலம் மட்டும் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் சென்றது. அதிமுக ஆட்சியில் ரூபாய் 400 கோடி மதிப்பீட்டில் ஈரோடு-மேட்டுப்பாளையம் சாலை, ரூபாய் 900 கோடியில் ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஈரோடு ஜி.ஹெச்.யில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு உள்ளிட்ட பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Former Minister MR Vijayabaskar appears in court

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். 

Former Minister MR Vijayabaskar appears in court

அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் ஏற்கனவே  எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர்  மீது அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (19.07.2024) ஆஜர்படுத்தப்பட்டார். 

Next Story

‘மக்களைக் குழப்பும் புதிய கிரிமினல் சட்டங்கள்’ - உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
New laws that confuse people High Court opinion

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

New laws that confuse people High Court opinion

இதனையடுத்து புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.  இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (19.07.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “அமலுக்கு வந்துள்ள புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்தும் முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் இது குறித்து மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.