Skip to main content

''இதெல்லாம் சரி பண்ணாம வசூல் பண்ண போயிருந்தியா...'' - விசிக கவுன்சிலரை அடிக்கப் பாய்ந்த திமுக வட்டச் செயலாளர்

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

DMK district secretary who beat up Visika councilor

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து மழை நீரை அகற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில் வெள்ள நிவாரணப் பணியின் போது தாமதமாக வந்த விசிக கவுன்சிலரை திமுக வட்டச் செயலாளர் ஒருவர் திட்டியதோடு, அடிக்கப் பாய்ந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை அசோக் நகர் 135 வது வார்டு கவுன்சிலர் சாந்தி. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். அசோக் நகர் மூன்றாவது அவென்யூ பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் திமுக வட்டச் செயலாளர் செல்வகுமார் என்பவர் அந்தத் தொகுதியின் எம்எல்ஏ மூலம் தொடர்பு கொண்டு மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து வாகனம் மூலம் அங்கு தேங்கி இருந்த நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அப்பொழுது சம்பவ இடத்திற்கு விசிக கவுன்சிலர் வந்த நிலையில் திமுக வட்டச் செயலாளருக்கும் விசிக கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

DMK district secretary who beat up Visika councilor

 

''காலையிலிருந்து எங்க போயிருந்த... இதெல்லாம் சரி பண்ணாம எங்க போயிருந்த... வசூல் பண்ண போயிருந்தியா... ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செஞ்ச...'' என ஆத்திரத்துடன் கேட்டார் திமுக வட்ட செயலாளர். அதற்கு சாந்தி ''சும்மா ஒன்னும் ஓட்டு போடல பணம் கொடுத்ததால் ஓட்டு போட்டார்கள்'' என்றார். இதனால் வாக்குவாதம் முற்றியது. “நாங்கள் மக்கள் காலில் விழுந்து உனக்கு ஓட்டு வாங்கித் தந்தோம்” என்ற திமுக வட்டச் செயலாளர் செல்வகுமார் சாந்தியை அடிக்கப் பாய்ந்தார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் செல்வகுமாரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.