தமிழ்நாட்டில் தற்போது சென்னை, ஆவடி, வேலூர், ஓசூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோயில் ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன. இதில், சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சியாக இருக்கிறது.
அண்மையில், தமிழ்நாட்டிலுள்ள 50க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தும் முடிவுகளை எடுத்திருக்கிறது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. இந்நிலையில், புதிதாக 3 மாநகராட்சிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
அந்த 3 மாநகராட்சிகளையும் வட தமிழ்நாட்டில் உருவாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 3 நகராட்சிகளே மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வட தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமூகத்தின் ஆதரவை முழுமையாக பெறுகிற திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த மாநகராட்சிகள் உருவாக்கப்படுகின்றன. அப்படி உருவாகும்பட்சத்தில் பாமகவின் அரசியல் செல்வாக்கினைக் குறைக்க முடியும் என்றும் திமுக தரப்பில் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மட்டும் நிலுவையில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டு, அதற்கான தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு கட்டமாக, உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நிலுவையிலுள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்தி முடித்துவிட்டு, புதிதாக உருவாக்கப்படும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை இந்த வருடத்தின் இறுதியில் நடத்தவும் திமுக அரசு ஆலோசித்துள்ளது.