சென்னை மயிலாப்பூர் மசூதி தெருவில் வசித்து வருபவர் தி.மு.க. கவுன்சிலர் விமலா. இவர் சென்னை மாநகராட்சி 124-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் 124-வது வட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார்.
கிருஷ்ணமூர்த்தியின் மூத்த சகோதரியான நாகலட்சுமிக்கு சொந்தமான நிலம் சோழிங்கநல்லூரை அடுத்த நாவலூர்கார்டன் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தியும், அவரது மனைவியான கவுன்சிலர் விமலாவும் சேர்ந்து ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்துவிட்டதாக நாகலட்சுமி புகார் அளித்திருந்தார். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட இந்தப் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.
இந்த நிலையில் இன்று இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைத்துவிட்டதாகவும், அதற்கான ஆவணங்களை சமர்பிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது முன் ஜாமீன் வழங்கிய ஆர்டரை மேஜிஸ்ட்ரேட் சரிபார்த்தபோது, முன் ஜாமீன் வழங்கியதாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் போலியானது எனதெரிய வந்தது.
இதனையடுத்து போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகக் கூறி திமுக கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரை எழும்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.