‘புளித்தமாவு’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நாகர்கோவில் பெட்டிக்கடையில் அடாவடி செய்து, கடைக்காரரின் மனைவியை படுமோசமான வார்த்தைகளால் பேசி, அவர் முகத்தில் மாவு பாக்கெட்டை வீசி அடித்த நிலையில், அவரது கணவரிடம் செம அடி வாங்கினார். இந்த இருதரப்பு கைககலப்பில் ஜெயமோகனை மட்டும் உத்தமராக்கி, கடைக்காரரையும் அவர் மனைவியையும் குற்றவாளியாக்கி சிறையில் தள்ளும் வேலைகளைக் கச்சிதமாக ஆரம்பித்துவிட்டார்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள்.
கடைக்காரர் செல்வத்தின் மனைவி கீதா கொடுத்த புகாரை உள்ளூர் காவல்துறை ஏற்க மறுத்த நிலையில், ஜெயமோகன் அளித்த புகாருக்காக பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் லோக்கல் போலீசிடம் பிரஷர் கொடுத்துள்ளனர். இத்தனைக்கும் செல்வத்தின் அண்ணன் பா.ஜ.க.வின் நகர வழக்கறிஞர் பிரிவு பொறுப்பில் இருக்கிறார். அவர், உண்மை நிலவரத்தை போலீசிடம் எடுத்துச் சொல்வதற்காக, தொடர்ந்து தொடர்பு கொண்டும் காவல்துறை அதிகாரிகள் அவரது போனை எடுக்கவில்லை.
இந்நிலையில், பா.ஜ.க. பிரமுகர்களின் ஆதரவு பெற்ற ஜெயமோகனுக்காக விழுப்புரம் எம்.பியும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் வென்றவருமான ரவிக்குமார் மிகுந்த சிரத்தையெடுத்து செயல்பட்டு வருகிறார். இதேபோல் தென் சென்னை திமுக எம்பியான தமிழச்சி தங்கப்பாண்டியனும் ஜெயமோகனுக்கு ஆதரவாக சிபாரிசு செய்துள்ளாராம். ஒரு பெண்ணிடம் அடாவடி செய்த நபருக்கு துணைபோவது கண்டு, நாகர்கோவில் தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடைக்காரர் செல்வம், தி.மு.க.வின் பகுதிச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியாயமான விசாரணை என்றால் இருதரப்பு புகாரையும் ஏற்றுக்கொண்டு அதன்பிறகு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சம்பவம் நடந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே பிரியாணி கடை, பியூட்டி பார்லர் என தி.மு.க. ஆட்கள் தகராறு செய்தபோது, அவர்களை விமர்சித்தவர்கள் இப்போது கடையில் தகராறு செய்தவரை விட்டுவிட்டு, கடைக்காரர்களை குற்றவாளியாக்குவது என்ன நியாயம் எனனவும் கேட்கிறார்கள்.
கடைக்காரர் செல்வத்தின் மனைவி கீதா நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அட்மிட்டான பிறகு, ஒன்றரை மணிநேரம் கழித்து, திடீரென வந்து அட்மிட்டான ஜெயமோகன், தன்னுடைய படைப்பாள எம்.பி. கூட்டாளிகள் மற்றும் பா.ஜ.க. பிரஷரால், கடைக்காரர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது எனத் தெரிந்ததும் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டார். ஆனால், ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கீதா இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்.
கதை வசனகர்த்தாவான ஜெயமோகன் சிறந்த முறையில் சித்தரித்திருக்கும் இந்த அடாவடி ஸ்க்ரீன்ப்ளேவுக்கு ஆதரவாக மேலும் பல படைப்பாளிகளின் ஆதரவைத் திரட்டி, தி.மு.க.வைச் சேர்ந்த கடைக்காரருக்கு எதிராக ஜெயமோகனுக்கு சேவை செய்யும் பணியில் தி.மு.க.வின் தோழமையில் உள்ள எம்.பிக்கள் படுதீவிரம் காட்டி வருகிறார்கள். அடுத்தகட்டமாக, தி.மு.க. எம்.பி.க்கள் கவிஞர் கனிமொழி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரிடமும் ஜெயமோகனுக்கு ஆதரவான அறிக்கை பெறும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவில் இம்முறை அதிக படைப்பாளிகள் களமிறங்கி வெற்றி பெற்றிருப்பதாக சமூக வலைத்தள அறிவுஜீவிகள் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் என கம்பு சுற்றிய நிலையில், அந்த படைப்பாளிகளின் முதன்மைப் பணியாக, பெண்ணிடம் அடாவடி செய்த எழுத்தாளரைக் காப்பாற்றும் செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் கண்டுகொள்ளப்படாத அல்லது இழிவாகப் பார்க்கப்ப்பட்ட வழக்கமான அரசியல்வாதி எம்.பிக்களோ தங்கள் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க இயன்றளவு டேங்கர் லாரிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயமோகனுக்காக படைப்பாளிகள் வரிந்து கட்டினாலும், நாகர்கோவில் பகுதி பொதுமக்களும் குறிப்பாக பெண்களும் அவரது அடாவடியை எதிர்த்து களமிறங்கத் தயாராகிவிட்டனர்.