திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திமுக பேரூர் செயலாளராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஜோசப் கோவில்பிள்ளை கிடா வெட்டி ஊரையே கூட்டி விருந்து வைத்துள்ளார்.
ஜோசப் கோவில் பிள்ளை நிலக்கோட்டை பேரூராட்சி மூன்றாவது வார்டு கவுன்சிலர், பேரூராட்சி துணைத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் கிடைக்க வில்லை. ஜோசப் வெற்றிக்காக மார்நாடு கருப்பணசாமி கோவிலில் கிடா வெட்ட ஜோசப் ஆதரவாளர்கள் தயாரானார்கள். பொறுமையாக இருக்கச் சொன்ன ஜோசப் கோவில் பிள்ளைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி திமுக பேரூர் செயலாளர் பதவி வழங்கினார்.
இதனால் பல மடங்கு மகிழ்ச்சியான ஜோசப் நேர்த்திக் கடனோடு சேர்த்து நன்றிக்கடன் செலுத்தும் விதமாக மார்நாடு கருப்பண்ணசாமி கோவிலுக்கு 25 கிடாக்களை வெட்டி ஒன்றிய செயலாளர் முருகன், மணிகண்டன், சௌந்திரபாண்டியன் பேரூர் செயலாளர்கள் விஜி, சின்னத்துரை பேரூராட்சி தலைவர்கள் சிதம்பரம், சுபாஷினி மட்டும் அல்லாமல் தொகுதி முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர் மற்றும் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் தனது வார்டு பொதுமக்கள் என மூன்று ஆயிரம் பேரை அழைத்து வந்து சிக்கன், கிடா கறி கூட்டு, குடல் குழம்பு என வகை வகையான அசைவ உணவுகளை சமைத்து மூன்றாயிரம் பேருக்கு பரிமாறி அசத்தல் விருந்து கொடுத்துள்ளார்.
நகரச் செயலாளர் பதவி கிடைத்த சந்தோஷத்தில் ஜோசப் கோவில் பிள்ளை கொளுத்திபோட்ட இந்த விருந்து தீ மாவட்டம் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. ''அண்ணே நீங்க எப்ப விருந்து போட போறீங்க'' என புதிதாக பொறுப்பேற்றுள்ள மற்றும் இருப்பை தக்கவைத்துள்ள ஒன்றிய, நகர செயலாளர்களை அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.