பா.ஜ.க.வின் கோவை மாவட்டத் தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, மனுசாஸ்திரம் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ஜ.க.வினரும், பல்வேறு இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பா.ஜ.க.வின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக, பேசியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதைக் கண்டித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தியும் பா.ஜ.க.வினர் காவல் நிலையம் திரண்டனர். மேலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
பாலாஜி உத்தம ராமசாமியை மருத்துவப் பரிசோதனைக்காக காவல்துறையினர், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, அவர் கோவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செந்தில்ராஜன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாலாஜி உத்தம ராமசாமியை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பா.ஜ.க. நிர்வாகியின் கைதுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.