Skip to main content

மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் மர்ம மரணம்; போலீசார் விசாரணை

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

District Collector Assistant passed away mysteriously

 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருப்பவர் அமர் குஷ்வா. இவரின் நேர்முக உதவியாளராக (பொதுக்கணக்கு) மோகனகுமரன் இருந்து வந்தார். 53 வயதான இவரின் சொந்த ஊர் சேலம். பணிமாறுதலில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். தினசரி சேலம் சென்று வர முடியாது என்பதால் திருப்பத்தூரிலேயே வாடகை வீடு எடுத்து தனியே வசித்து வந்தார். இவரது மனைவி சேலத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சேலத்தில் படித்து வருகிறார்.

 

கடந்த நவம்பர் 12 ஆம் தேதி பணிக்கு வந்தவர் மாலை வீடு சென்றுள்ளார். ஆனால், நவம்பர் 13 ஆம் தேதிக்கு பணிக்கு வரவில்லை. இவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் என வந்துள்ளது. சேலத்தில் உள்ள அவரது மனைவிக்கு தொடர்பு கொண்டு ஊழியர்கள் கேட்ட போது ஊருக்கு வரவில்லை எனச் சொன்னதாகத் தெரிகிறது.

 

நவம்பர் 14 ஆம் தேதி மாலை அவரது அலுவலக ஊழியர்கள் அவர் தங்கியுள்ள வீட்டுக்குச் சென்று பார்த்த போது உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார். உடலைக் கைப்பற்றி திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். நவம்பர் 15 ஆம் தேதி அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். அதன் பின்னர் அவரது உடல் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது இயற்கை மரணம் என தற்போது சொல்லப்பட்டாலும் அவரின் உடற்கூராய்வு முடிவு வந்த பிறகே மர்மம் விலகும் எனக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்